Published : 09 Mar 2024 06:22 AM
Last Updated : 09 Mar 2024 06:22 AM
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள `ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். அந்த உணவகத்தின் முன்புறம், சமைக்கும் பகுதி ஆகியவை வெகுவாக சேதமடைந்தன. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.
இவ்வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியாமல் பெங்களூரு போலீஸார் திணறியதால், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சந்தேகிக்கப்படும் குற்றவாளி, உணவகத்தில் குண்டுவைத்துவிட்டு அங்கிருந்து அரசுப் பேருந்து மூலம் துமக்கூரு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பிறகு மார்ச் 5ம் தேதிவரை அங்கிருந்த குற்றவாளி, அதன்பிறகு பெல்லாரி, மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளார்.
மார்ச் 7ம் தேதி குற்றவாளி கார்வார் அருகிலுள்ள கோகர்ணா பேருந்தில் பயணிப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அன்றைய தினம் அவர் தொப்பி, கண்ணாடி அணியாமல் பயணித்தது உறுதியாகியுள்ளது. அதன்பிறகு அவர் மங்களூருவை அடுத்துள்ள பட்கலுக்கு சென்றதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு மற்றும் மங்களூரு போலீஸாரின் உதவியுடன் குற்றவாளியை பிடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக பெல்லாரி மாவட்டம் கவுல் பஜாரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை நேற்று கைது செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதேபோல இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த மினாஸ், ஷயீத் சமீல், அனஷ்த் இக்பால், ஷா ரஹ்மான் ஆகிய 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT