Published : 08 Mar 2024 04:36 AM
Last Updated : 08 Mar 2024 04:36 AM

370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பயணம்: காஷ்மீரில் ரூ.6,400 கோடியில் திட்டங்கள் தொடங்கினார் மோடி

ஸ்ரீநகரில் நேற்று நடந்த விழாவில், காஷ்மீர் வணிகர்கள் காட்சிக்கு வைத்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர் மோடி.படம்: பிடிஐ

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு, ஜம்மு - காஷ்மீர் புதிய உயரங்களை தொடுவதாக அவர் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உதயமாகின.

இந்நிலையில், 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு, பிரதமர் மோடி முதல்முறையாக நேற்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றார். ‘வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர்’ என்றபெயரில் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரூ.6,400 கோடிமதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். விவசாய மேம்பாட்டு திட்டம்,சுற்றுலா ஊக்கமளிப்பு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான கடிதங்களையும் வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஒரு காலத்தில் காஷ்மீருக்கு செல்வதற்கே மக்கள் அஞ்சினர். இப்போது இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமர்நாத் குகை கோயிலுக்கு அதிக அளவு பக்தர்கள் வந்துள்ளனர்.

‘சலோ இந்தியா’ (இந்தியா செல்வோம்) என்ற திட்டத்துக்காக, வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்திய சுற்றுலா தலங்கள் குறித்து எடுத்துரைத்து, நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 வெளிநாட்டினரை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதன் மூலம் இந்திய சுற்றுலா வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

370-வது சட்டப்பிரிவு குறித்து எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக தவறானத கவல்களை பரப்பின. இந்த பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீர் புதிய உயரங்களை தொடுகிறது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். இளைஞர்களுக்கு புதியவாய்ப்புக்கான கதவுகள் திறந்துள்ளன.

விவசாயிகளின் நலனுக்காக, உலகின் மிகப்பெரிய கிடங்கு வசதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஜே அண்ட் கே வங்கிக்கு மத்திய அரசுரூ.1,000 கோடி உதவித் தொகை வழங்கியது. தற்போது வங்கி வருவாய் ரூ.1,700 கோடியை எட்டியுள்ளது.

சில நாட்களில் ரம்ஜான் நோன்புதொடங்க உள்ளது. 8-ம் தேதி (இன்று) மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, காஷ்மீர் வணிகர்கள், கைவினைஞர்களுடன் பிரதமர் மோடிகலந்துரையாடினார். மத்திய அரசுதிட்ட பயனாளியான நிசாம் என்ற இளைஞரின் விருப்பப்படி, அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, அந்த படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டார்.

தமிழகம், புதுச்சேரி ஆன்மிக சுற்றுலா: ஸ்ரீநகரில் நேற்று நடந்த விழாவில், நாடு முழுவதும் ரூ.1,400 கோடி மதிப்பில் 42 ஆன்மிக, சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நவக்கிரக கோயில்கள், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில், ஆந்திராவின் அன்னாவரம் கோயில் ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x