Published : 08 Mar 2024 06:17 AM
Last Updated : 08 Mar 2024 06:17 AM

விமான பணியாளர்களிடம் சண்டையிட்ட கார்ப்பரேட் பெண் முதலாளியை விமானத்தில் ஏற்ற மறுப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: கடந்த 5-ம் தேதி, பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தில் தலைவராக பொறுப்பு வகிக்கும் பெண் ஒருவர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் சொகுசு இருக்கை வகுப்பில் ஏறியவர் விமான பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் மரியாதைக் குறைவாக அவர் பேசியதால் விமான குழுவினர் விமான கேப்டனிடம் புகார் அளித்தனர்.

அவரது முரட்டுத்தனமான நடத்தை குறித்து இதர பயணிகளும் சங்கடம் தெரிவித்தனர். இதனால் ஒன்பது மணிநேர வான்வழி பயணத்தில் அந்த கார்ப்பரேட் பெண் முதலாளியை உடன் அழைத்துச் சென்றால் சக பயணிகளுக்கும் அவர் தொந்தரவு கொடுக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்பட்டது. இதனால் அவர் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டார்.

இதையடுத்து, அவசர வேலை நிமித்தமாக அந்த கார்ப்பரேட் பெண் முதலாளி லண்டன் செல்லவிருப்பதால் அவர் பயணம் செய்ய அனுமதிக்கும்படி அவருடன் வந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், கார்ப்பரேட் பெண் முதலாளியின் முரட்டுத்தனமான நடத்தை ஏற்கத்தக்கதல்ல என்று விமான கேப்டன் பதிலளித்தார். பயணிகளில் சாமானியருக்கும் முக்கிய பிரமுகருக்கும் இடையில் வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்வதே தங்களுடைய நிறுவனத்தின் கொள்கை என்று கேப்டன் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக, கார்ப்பரேட் பெண் முதலாளியின் நடத்தைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் லண்டனுக்கு செல்லும் அடுத்த ஏர் இந்தியா விமானத்தில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x