Last Updated : 17 Aug, 2014 10:38 AM

 

Published : 17 Aug 2014 10:38 AM
Last Updated : 17 Aug 2014 10:38 AM

பஸ், லாரிகளின் டீசல் பயன்பாட்டை குறைக்க சர்வதேச எரிபொருள் விதிகளை அமல்படுத்த முடிவு

பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் டீசல் பயன்பாட்டைக் குறைக்க சர்வதேச எரிபொருள் திறன் நிபந்தனைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சரக்கு வாகனங்களுக்கான டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மத்திய அரசுக்கு மானியச் சுமை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பஸ், லாரி போன்ற கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நாட்டின் டீசல் பயன்பாட்டில் 37 சதவீதத்தை பயன்படுத்தி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் 26.75 சதவீதமும், பஸ்கள் 10.75 சதவீதமும் டீசலை பயன்படுத்தி வருகின்றன.

தற்போது இயங்கும் பெரும்பாலான கனரக வாகனங்கள் பழையதாகவும், அதன் ஆயுள் காலத்தையும் தாண்டி பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்த வாகனங்கள் டீசலை அதிக அளவில் உறிஞ்சுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய வாகனங்களை படிப்படியாக அகற்றும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கனரக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு சர்வதேச எரிபொருள் திறன் நிபந்தனைகளை அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பெட்ரோலியத்துறை கூடுதல் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது. இக்குழுவுக்கு 15 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜார் இத்தகவலை நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். பஸ், லாரிகளின் மாசு வெளியீட்டை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் எரிசக்தி திறன் பயன்பாடு மற்றும் மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவற்றை அமல்படுத்துவதற்கான கால அளவு, செயல்திட்டம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகளைக் கொண்ட குழு பரிந்துரைக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x