Published : 07 Mar 2024 11:19 AM
Last Updated : 07 Mar 2024 11:19 AM
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப் பேரவைக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்த நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியோ தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, பாஜக தலைவர்கள் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகி உள்ளனர். இந்நிலையில், பாஜக மேலிட அழைப்பின் பேரில் ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி நேற்று டெல்லி சென்றார். ஆந்திர அரசியல் சூழல் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமித் ஷாவிடம் அவர் விவரித்தார்.
இந்நிலையில், பவன் கல்யாண் ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதால், சந்திரபாபு நாயுடுவை டெல்லிக்கு வருமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும், அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் நேற்று சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று டெல்லி செல்ல தீர்மானித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT