Published : 07 Mar 2024 08:51 AM
Last Updated : 07 Mar 2024 08:51 AM

அமலாக்கத் துறை ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

கொல்கத்தா: கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அமலாக்கத் துறை ரெய்டுக்கு உள்ளான, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் ராய் பாஜகவில் இணைந்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பிறகு அமைதி காத்து வந்த தபஸ் ராய் நேற்று முன்தினம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் விலகினார். தொடர்ந்து நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பாஜக மேற்குவங்க தலைவர் சுவேந்து அதிகாரி முன் பாஜகவில் இணைந்தார் தபஸ் ராய். திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகியதற்கான காரணத்தை அடுக்கிய தபஸ் ராய், "அமலாக்கத் துறை சோதனையின்போது திரிணமூல் காங்கிரஸ் அமைதி காத்தது. எனக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. கட்சித் தலைவர்கள் யாரும் ஒரு அறிக்கை கூட கொடுக்க முன்வரவில்லை. மம்தா பானர்ஜி என்னை தொடர்புகொள்ளவில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் வேதனை அடைந்தோம். அமலாக்கத் துறையை பாஜக அனுப்பவில்லை. சக கட்சிக்காரர்கள் தான் என்னை போட்டியாக கருதி, அமலாக்கத் துறையை ஏவினர். பாஜகவில் இணைந்துள்ள நான் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் பாஜகவில் இணைந்துள்ளதை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், "தனிப்பட்ட நலனுக்காக கொள்கைகளை மறந்து பாஜகவில் இணைந்துள்ளார். தபஸ் ராய் போன்ற துரோகிகளை வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

முறைகேட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களை மத்திய அமைப்புகள் கண்டு கொள்ளாது என எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தபஸ் ராய் அமலாக்கத் துறை சோதனைக்கு ஆளாகி பாஜகவில் இணைந்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x