Published : 07 Mar 2024 07:05 AM
Last Updated : 07 Mar 2024 07:05 AM
மும்பை: வயதான பெற்றோரை கைவிடும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதியோர் பராமரிப்பு திட்டத்தை பொருளாதார அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
கூட்டுக்குடும்ப முறையை போற்றி பாதுகாத்து வந்த இந்திய சமூகத்தில் தனிக்குடும்ப முறை, ஒற்றை பெற்றோர் என்கிற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 18 வயது அல்லது 20 வயது அதிகபட்சம் 25 வயதில் தங்களது பெற்றோரை விட்டு விலகிச் செல்லும் குழந்தைகளைத்தான் இப்போதெல்லாம் நமது குடும்பங்களில் அதிகம் காண முடிகிறது. இந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், இத்தகைய சூழலை எதிர்கொள்ளப் பொருளாதார மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் நாம் தயாராக இருக்கிறோமா? பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது பற்றி எவரேனும் பேசினாலே உடனடியாக அவரை சமூகம் கண்டிக்கும் காலமொன்று முன்பிருந்தது. ஆனால், இப்போது அத்தகைய எதிர்வினை நீர்த்துப்போய்விட்டது.
கற்பனை செய்து பாருங்கள், இன்னும் இரண்டு தலைமுறைகள் கழித்து முதியோர் பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளதா? ஆகவே முதியோர் பராமரிப்பு முதலீடு குறித்து சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பராமரிப்பு பொருளாதாரத்தை வணிக ரீதியாகவும் மேம்படுத்த வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT