Published : 03 Feb 2018 08:42 AM
Last Updated : 03 Feb 2018 08:42 AM
கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் பெருமளவில் நிதி அறிவித்த நிலையில், புதிய மாநிலமான ஆந்திரா மீது மட்டும் அலட்சியம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை சரிவர பிரிக்காத காரணத்தினால், 125 ஆண்டு சரித்திரம் கொண்டதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்தனர்.
காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவில் கே. சந்திரசேகர ராவுடனும், ஆந்திராவில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடனும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு மிக மோசமான வகையில் மாநிலத்தை பிரித்தது. மாநிலப் பிரிவினையால் பாதிக்கப்பட்டாலும், மத்திய அரசுடன் தோழமையாக இருந்தால்தான், புதிய ஆந்திர மாநிலத்தை கட்டிக் காக்க இயலும் என்பதால், பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தது.
ஆனால், மத்திய அரசோ, இந்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு அநியாயம் செய்து விட்டது. போலாவரம் அணைக்கட்டு, அமராவதிக்கு சிறப்பு நிதி, விசாகப்பட்டினத்துக்கு தனி ரயில்வே மண்டலம், கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை போன்ற எதையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிற்கு, மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்ட எந்த சிறப்பு நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதுபோல் மத்திய அரசு நடந்து கொண்டால் எப்படி மக்கள் முகத்தில் விழிப்பது என கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் கேட்கின்றனர். ஆந்திரா மீது மத்திய அரசுக்கு இவ்வளவு அலட்சியம் ஏன்? மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள் என்பதற்கு ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகளே சிறந்த உதாரணம்” என்றார்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை தனது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இதனை தொடர்ந்து முக்கிய முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. இதனால் வரும் 2019-ல் நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் இப்போதுள்ள கட்சிகளின் கூட்டணி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT