Last Updated : 06 Mar, 2024 11:34 AM

1  

Published : 06 Mar 2024 11:34 AM
Last Updated : 06 Mar 2024 11:34 AM

முக்கிய மாநிலங்களில் பாஜக தொகுதி பங்கீடு

பாஜக கூட்டணியில் உத்தரபிரதேசம் மற்றும் அசாமில் தொகுதிப் பங்கீடு முடிவாகி, அறிவிப்பு நிலையில் உள்ளது. பிஹார், மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது. 194 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, முதல் கட்சியாக பாஜக வெளியிட்டுள்ளது.

பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. முக்கிய மாநிலமான உ.பி.யில் தொகுதிப் பங்கீட்டை பாஜக முடித்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 74-ல் போட்டியிடுகிறது.

கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிக்கு தலா 2 இடங்களும் நிஷாத் கட்சி மற்றும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி) கட்சிக்கு தலா ஓரிடமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகளில் ஆர்எல்டி மற்றும் எஸ்பிஎஸ்பி ஆகியவை சமாஜ்வாதி அணியில் இருந்து பிரிந்தவை.

சமாஜ்வாதி அணியை விட பாஜக அணியில் இரு கட்சிகளுக்கும் குறைவான தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், இந்த 4 கட்சிகளுக்கும் உ.பி.பாஜக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுகிறது. ஆர்எல்டி-க்கு மேற்கு உ.பி.யில் பாக்பத், பிஜ்னோர் அல்லது மதுரா கிடைக்க உள்ளன.

இதுபோல் அப்னா தளத்துக்கு கிழக்கு உ.பி.யில் பிரதாப்கர், மிர்சாபூர் ஆகிய தொகுதிகள் கிடைக்க உள்ளன. அசாமிலும் தொகுதிப் பங்கீட்டை பாஜக முடிந்து விட்டது. இங்கு மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 10 இடங்களில் போட்டியிடுகிறது. அசாம் கன பரிஷத் 3, ஐக்கிய லிபரல் மக்கள் கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் பாஜகவில் சேரத் தயாராக உள்ளனர். இதன் பிறகு அசாம் தொகுதிப் பங்கீடும் வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளது.

ஹரியாணாவில் பாஜக - ஜனநாய ஜனதா கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை. எனவே இங்குள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிட உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) ஆகியவை கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.

இங்கு மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் சிவசேனா 22 தொகுதிகளை கேட்கிறது. இதனால் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் 3 கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடிக்கத் திட்டமிட்டுள்ளன.

பிஹாரில் பாஜக கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கட்சியின் இரு பிரிவுகள், ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனதா தளம் ஆகியவை இந்த அணியில் உள்ளன.

இவற்றில் நிதிஷ் குமாரின் கட்சிக்கு மட்டும் அதிக தொகுதிகளை பாஜக ஒதுக்க உள்ளது. பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பாஜக - சிரோமணி அகாலி தளம் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கிவிட்டது.

இங்கு கடைசி நேரத்திலும் உடன்பாடு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படாவிட்டால் பஞ்சாபில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டிவரும். மத்தியபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x