Published : 06 Mar 2024 09:54 AM
Last Updated : 06 Mar 2024 09:54 AM
இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். எனவே இந்தியா நாடல்ல, இது துணைக் கண்டம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா என பல மொழிகள் பேசும் தேசங்கள் உள்ளன. இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் அது இந்தியா” என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி தொடர்கின்றன.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த பிறகு இப்போது ஆ.ராசா இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார், மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறுகிறார்.
ஒரு தேசமாக இந்தியா என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்.காங்கிரஸும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. இவர்களின் உத்தேச பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியும் மவுனம் காக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமித் மாளவியா தனது பதிவுடன் ஆ.ராசா உரையின் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஆ.ராசா உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைத்துள்ளார்.
இந்நிலையில் ஆ.ராசாவின் இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட். கூறும்போது, “ஆ.ராசாவின் கருத்துகளை நான் 100 சதவீதம் ஏற்கவில்லை. இத்தகைய கருத்தை நான் கண்டிக்கிறேன்.
ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். அது, ஆ.ராசாவின் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை நான் ஆதரிக்கவில்லை. ஒருவர் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT