Published : 06 Mar 2024 07:24 AM
Last Updated : 06 Mar 2024 07:24 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் 195 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் கட்சி மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் பிரதமர் மோடி, தேர்தல் குழுவினர், மேலிடத் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பட்டியலை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து கட்சி மேலிட வட்டாரங்கள் கூறும்போது, “வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேட்பாளரின் பின்னணி, அவர் மீதுள்ள குற்ற வழக்குகள், அரசியல் வரலாறு, தொகுதியில் அவருக்கான வெற்றி வாய்ப்பு ஆகிய காரணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் அசன்சோல் (பவன் சிங்), உ.பி.யின் பாராபங்கி (உபேந்தர் சிங் ராவத்) தொகுதி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகினர்.
அவர்கள் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக கருதப்பட்டதால் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேட்பாளர் தேர்வு செய்யும்போது அதிக கவனத்துடன் கட்சி மேலிடம் செயல்படுகிறது. வேட்பாளர்கள் நிலவரம் குறித்து மாநிலத் தலைமைகளுடன் ஆலோசித்து அதன் பின்னரே பெயரை வெளியிட கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது’’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT