Last Updated : 02 Feb, 2018 06:27 PM

 

Published : 02 Feb 2018 06:27 PM
Last Updated : 02 Feb 2018 06:27 PM

தோல்வி அடைந்த பட்ஜெட்: தெலுங்கு தேசம் கட்சி கடும் விமர்சனம்; பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமா?

மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தோல்வி அடைந்த பட்ஜெட் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய கட்சியான தெலுங்குதேசம் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் இருந்து அந்த கட்சி வெளியேறுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணயில் முக்கிய கட்சியாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் இரு கட்சிகளும் இணைந்து சந்தித்தன.

அதன்பின் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின் தலைநகரம் அமரவாதி அமைக்க அதிக நிதி உதவியையும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் சந்திரபாபு நாயுடு கோரினார். ஆனால், அந்த நிதி உதவியை இதுவரை மத்திய அரசு அளிக்கவில்லை என்று தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டுகிறது.

இதனால், பாஜகவுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே லேசான உரசல் போக்கு நீடித்து வந்தது. அதேசமயம், ஆந்திரா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஓய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கைகோர்க்க நேரம் பார்த்து வருகிறது. ஒருவேளை தெலுங்குதேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்தால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாஜகவுடன் அணி சேரும்.

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை தெலுங்குதேசம் கட்சிக்கு இணையாக ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மிக பலம் வாய்ந்த கட்சி என்று சொல்வது கடினம்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். ஆதலால், சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்துவிலகினால், ஜெகன் மோகன் பாஜகவுடன் கைகோர்க்கலாம்.

இந்த சூழலை அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த சில வாரங்களுக்கு முன் கட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில், “ மத்தியில் உள்ள கூட்டணி குறித்தோ, அல்லது பாஜக தலைமை குறித்தோ யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. பாஜக தலைவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்திவிட்டு சென்றுவிடுங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து நடங்கள்” என உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் தெலங்குதேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அச்சுறுத்தும் சக்தியாக நடிகர் பவன் கல்யாண் வளர்ந்து வருகிறார். 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஜன சேனா கட்சியின் தனியாக தேர்தலில் நிற்கப்போவதாத் தெரிவித்துள்ளார். இது சந்திரபாபு நாயுடுவின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு சவாலாக இருக்கிறது.

மேலும் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியின் சீர்கேடுகளை சுட்டிக்காட்டும் வகையில் ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், பாஜக கூட்டணியில் சேரத் தயார் என்று அவர் பேசி வருகிறார். இதனால், பல பாஜக தலைவர்கள் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு இருக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்பார்த்தார். ஆனால், அறிவிப்பின்றி ஏமாற்றும் அளிக்கும் பட்ஜெட்டாக தெலுங்குதேசம் கட்சிக்கு அமைந்துவிட்டது.

இதையடுத்து, தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவைக் கூட்டத்தைக் இன்று கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய பட்ஜெட் குறித்து கடுமையான வார்த்தைகளைக் கூறி அவர் விமர்சனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கூட்டணிக்குள் குழப்பம் எழுத் தொடங்கிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் தேசம் கட்சி தொடருமா என்பது குறித்து அடுத்தவாரத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த கூட்டத்தின் வெளிப்பாடாக தெலுங்குதேசம் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜி.எஸ்.ஆர்.கே. பிரசாத் அமராவதியில் பாஜகவை விமர்சித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தோல்வி அடைந்த பட்ஜெட். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு தேவையான நிதித் தேவை குறித்து கூறியபின்பும் எந்த அறிவிப்பும் இல்லை. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போது, செய்து கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

இந்த பட்ஜெட் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இருந்தபோதிலும், நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வோம். எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் மாநிலத்திலும், மத்தியிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x