Published : 05 Mar 2024 07:48 PM
Last Updated : 05 Mar 2024 07:48 PM

பாஜக மீதான புதிய சந்தேகம் முதல் ‘வரலாறு காணாத’ தங்கம் விலை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 5, 2024

தேர்தல் பத்திரம் விவரம் - பாஜக மீது காங்கிரஸ் சந்தேகம்: “தனது சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகளுக்கு யாரெல்லாம் எவ்வளவு நன்கொடை வழங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படுவதையே பாஜக விரும்புகிறது. தற்போது இருக்கும் மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

அதேவேளையில், காங்கிரஸின் முக்கியத் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, "நன்கொடை வியாபாரம் குறித்த விவரத்தை மறைக்க நரேந்திர மோடி தனது மொத்தப் படையையும் திணித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்னர் எதற்காக எஸ்பிஐ வங்கி தேர்தலுக்கு முன்பாக இந்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ள தேர்தல் பத்திங்கள் குறித்த விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை வெளியிட ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றதில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நலன் - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி: “மோடியின் சித்தாந்தத்துக்கு எதிராக தாங்கள் களத்தில் நிற்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள்தான் எனக்கு குடும்பம் இல்லை என கூறுகிறார்கள். இதுதான் கருத்தியல் மோதலா? குடும்பம்தான் முதலில் என்பதுதான் அவர்களின் கருத்தியல். நாடுதான் முதலில் என்பதுதான் மோடியின் கருத்தியல். அவர்களுக்கு குடும்பம்தான் எல்லாம். எனக்கு நாடுதான் எல்லாம். குடும்பத்தின் நலனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் என்னை தியாகம் செய்கிறேன்" என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

விசிக-வில் இருந்து ஜாபர் சாதிக்கின் சகோதரர் நீக்கம்: போதைப்பொருள் வழக்கு விவகாரத்தின் எதிரொலியாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக் உடன் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் முகமது சலீம் என்பவரும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப் பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

“மோடியின் பொய் மூட்டை வியாபாரம் தமிழகத்தில் எடுபடாது”: “நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு திரும்ப திரும்ப வந்து செல்வது வியப்பளிக்கிறது. திங்கள்கிழமை சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அவரது பேச்சு பொய் முட்டைகள் மொத்த வியாபார விளம்பரமாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள், மொத்த வியாபாரம் தமிழக மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில், மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

உறுதியானது அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேசிய கிருஷ்ணசாமி, “அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. அதிமுக - புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதியானது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெரிவித்தோம். அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

உயிருக்குப் போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உயிருக்கு போராடி வந்த யானை மரணமடைந்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

முன்னதாக, தாயை விட்டு பிரிய முடியாமல் தவித்த இரண்டு மாதங்களே குட்டி யானையின் பாசப் போராட்டம் குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுவிப்பு: மாவோயிஸ்ட்கள் தொடர்பில் இருந்த வழக்கில் இருந்து டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மற்றும் ஐந்து பேரை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை செவ்வாய்க்கிழமை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

விண்ணைத் தொடும் தங்கம் விலை!: கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கம் விலை ரூ.48 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120 என்ற மதிப்பில் விற்பனையானது. கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனையானது.

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி: இஸ்ரேலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்களாவர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் திங்கள்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. தாகுதலில் உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பத்னிபின் மேக்ஸ்வெல் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள் புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே “தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் குறிப்பாக வடக்கு, தெற்கு எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வேலை செய்யும் இந்தியர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x