Published : 05 Mar 2024 05:06 PM
Last Updated : 05 Mar 2024 05:06 PM
ஷாஜபூர் (மத்தியப் பிரதேசம்): “நம் இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டுக் கொண்டு கடைசி வரை பட்டினியாகக் கிடந்து உயிர்விட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தின் ஷாஜபூரில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன்மூலம்தான் மக்களுக்கு சமூக நீதியை வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகரமான நடவடிக்கை. காங்கிரஸ் எப்போதுமே புரட்சிகரமான நடவடிக்கைகளை மட்டுமே எடுக்கும்.
நாட்டின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராடியது. அப்போது அவர்கள் (பாஜக) எங்கே இருந்தார்கள்? பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, டிஜிட்டல் புரட்சி என அனைத்து புரட்சிகளையும் செய்தது காங்கிரஸ். ஆனால், நமது இளைஞர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டுக் கொண்டு கடைசி வரை பட்டினியாகக் கிடந்து உயிர்விட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்.
நமது ராணுவத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்கள் இருந்தன. அவர்களுக்கு ஓய்வூதியம் இருந்தது. ஒருவேளை அவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு மரியாதை இருந்தது. தற்போது அக்னிவீர் திட்டத்தை அமல்படுத்துகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் 4 பேரை பணிக்கு எடுத்தால், 3 பேரை வெளியேற்றிவிடுவார்கள். அந்த மூன்று பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தர்களாக இருக்கலாம்" என ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT