Published : 05 Mar 2024 03:55 PM
Last Updated : 05 Mar 2024 03:55 PM

இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுரை

புதுடெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் குறிப்பாக வடக்கு, தெற்கு எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வேலை செய்யும் இந்தியர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், +972-35226748 என்ற ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஹெல்ப்லைன் எண்ணாகும். அதேபோல், cons1.telaviv@mea.gov.in என்ற இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? - அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை. காசாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இப்போது பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாகவும், மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ பராமரிப்பு பற்றாக்குறையால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பத்னிபின் மேக்ஸ்வெல் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் ஜிவ் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புஷ் ஜோசப் ஜார்ஜ் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்வின் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இந்தத் தாக்குதலை லெபனானைச் சேர்ந்த ஷைட் ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பானது கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி முதல் ஹமாஸுக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x