Published : 05 Mar 2024 03:47 PM
Last Updated : 05 Mar 2024 03:47 PM
புதுடெல்லி: “தனது சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ள தேர்தல் பத்திங்கள் குறித்த விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை வெளியிட ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றதில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. எஸ்பிஐ-யின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரங்களைப் பொறுத்தவரை அது வெளிப்படைத் தன்மை இல்லாதது. ஜனநாயக விரோதமானது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக செய்த தங்களின் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை பயன்படுத்துகிறது.
மோடி அரசின் கருப்பு பணத்தை மாற்றும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறுவது, சட்டவிரோதமானது எனக் கூறியிருந்த உச்ச நீதிமன்றம் நன்கொடையாளர்களின் விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பாஜக அந்தத் தகவல்கள் ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படுவதையே விரும்புகிறது. தற்போது இருக்கும் மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எஸ்பிஐ வங்கி ஜூன் 30-ம் தேதி தகவல்கள் பறிமாறப்படுவதை விரும்புகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக பாஜகதான் அதிக பலனடைந்துள்ளது. இந்த மறைமுகமான தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டாளிகளுக்கு நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட பாஜகவின் நிழல் உறவை அரசு வசதியாக மறைக்கப் பார்க்கிறதா?
நன்கொடை வழங்கியவர்களின் 44,434 தானியங்கித் தரவுகளை 24 மணி நேரத்தில் வெளியிட்டு, அதை பொருத்தியும் பார்க்க இயலும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், எஸ்பிஐ-க்கு ஏன் கூடுதலாக 4 மாதங்கள் தேவைப்படுகிறது?
தேர்தல் பத்திரம் திட்டம் வெளிப்படைத் தன்மை இல்லாதது, ஜனநாயக விரோதமானது, சமநிலையை சீர்குலைக்கிறது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. ஆனால் மோடி அரசு, பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகமும் பாஜகவின் கஜானாவை நிரப்புவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் மூலம் எதிர்க்கட்சிகளை எல்லா சூழ்நிலைகளிலும் அழிக்கவே நினைக்கிறது. பாஜக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அழிக்க எஸ்பிஐ வங்கியை பயன்படுத்த நினைக்கிறது" என்று கார்கே தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் மீதான மோசடியில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி தப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பு, யாரெல்லாம் (கட்சிகள்) யாரிடமிருந்து என்னவெல்லாம், எவ்வளவு எல்லாம் பெற்றார்கள் என்பதை மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் முக்கியத் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவொன்றில், "நன்கொடை வியாபாரம் குறித்த விவரத்தை மறைக்க நரேந்திர மோடி தனது மொத்தப் படையையும் திணித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்னர் எதற்காக எஸ்பிஐ வங்கி தேர்தலுக்கு முன்பாக இந்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை?” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “நன்கொடைகள் குறித்த தகவல்கள் அநாமதேயமாக வைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை மீட்டெடுக்க அதிக கால அவகாசம் தேவைப்படும். பத்திரங்கள் வழங்கிய தகவல்களும், அதனை மீட்டெடுப்பதற்கான தகவல்களும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவான தகவல்கள் பராமரிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் நன்கொடையாளர்கள் குறித்த ரகசிய காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் திட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்த வழக்கை விசாரித்த அமர்வு, ‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், தேர்தல் நிதி தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக இருப்பது அவசியம். இதனை வெளிப்படையாக தர மறுப்பது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT