Published : 05 Mar 2024 11:27 AM
Last Updated : 05 Mar 2024 11:27 AM
புதுடெல்லி: இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (திங்கள்கிழமை) அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2022, ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை ஷெபாஸ் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.
ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் - நவாஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையைப் பெறவில்லை. என்றாலும் அதிக இடங்களைப் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. ஷெபாஷ் ஷெரீபுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, முடஹித்தா குவாமி இயக்கம் -பாகிஸ்தான், இஸ்டேகம் இ பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ, பலுசிஸ்தான் அவாமி கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ஜியா, தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக அவர் பிரதமராக திங்கள் கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதிபர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரராவர். இந்தமுறை நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவிவருகிற நிலையில், அவர் தன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீபை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதையடுத்து இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தானின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24- வது பிரதமராவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT