Published : 19 Feb 2018 02:09 PM
Last Updated : 19 Feb 2018 02:09 PM

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்

பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு அநீதி இழைத்தமைக்கும், மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவித்தபடி சிறப்பு அந்தஸ்து வழங்காமைக்கும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரகாசம் மாவட்டத்தில் அறிவித்தார். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 91 வது நாளாக பிரகாசம் மாவட்டத்தில் தனது பாத யாத்திரையை தொடர்ந்தார்.

அப்போது அவர், கந்துகூரு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

''கடந்த 4 முறை மத்திய அரசு பட்ஜெட் அறிவித்த போது பேசாத சந்திரபாபு நாயுடு இம்முறை மட்டும் ஆந்திராவிற்கு மத்திய அரசு அநீதி இழைத்து விட்டதாக கூறுவது ஏன்? தேர்தல் நெருங்குவதால், இத்தனை ஆண்டுகள் பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது சிறப்பு அந்தஸ்து நினைவுக்கு வந்ததா ? இதற்கு நடிகர் பவன் கல்யாண் ஒரு தனி கமிட்டி அமைத்து மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? மாநில அரசு எவ்வளவு செலவு செய்தது? என கணக்கிடப் போகிறாரா ?

தெலுங்கு தேசத்தின் ஏஜெண்டாக செயல்பட்ட பவன் கல்யாண் அவர்களே, இப்போதாவது சிறப்பு அந்தஸ்துக்காக மக்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்குங்கள். சிறப்பு அந்தஸ்து வந்தால், ஆந்திராவில் தொழில் தொடங்க முன் வரும் நிறுவனங்கள் வருமான வரி, ஜிஎஸ்டி போன்றவை செலுத்தத் தேவையில்லை. அதனால் அதிகமான நிறுவனங்கள் ஆந்திராவில் தொழில் தொடங்க முன் வருவார்கள். அப்படி வந்தால், தொழில் வளம் பெருகும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். வறுமையும், ஏழ்மையும் ஒழியும்.

எங்கள் கட்சியில் 5 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 54 எம்.பி.க்களின் பலம் தேவை. ஆதலால் தெலுங்கு தேசம் கட்சியும், அதன் நெருக்கமான சில கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்தால் இது சாத்தியமாகும்.

ஒருவேளை தெலுங்கு தேசக் கட்சி, மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், எங்கள் கட்சியும் ஆதரவு அளிக்கத் தயார்.''

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

ரோஜா பேட்டி

இந்நிலையில் இன்று காலை நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா திருமலையில் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இல்லையேல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதே பிரச்சினைக்காக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன் வர வேண்டும். இதற்கு நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேச கட்சியினரிடையே பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.''

இவ்வாறு நடிகை ரோஜா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x