Last Updated : 04 Mar, 2024 09:37 PM

5  

Published : 04 Mar 2024 09:37 PM
Last Updated : 04 Mar 2024 09:37 PM

மேடையில் மோடியிடம் ‘இணக்கம்’ காட்டிய முதல்வர் ரேவந்த்... தெலங்கானா காங். சலசலப்பும் பின்னணியும்

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி மேடையில் இருக்கும்போது அவரை ‘அண்ணன்’ என்று கூறியதுடன், “குஜராத் மாடலைப் போல் தெலங்கானாவும் முன்னேற்ற வேண்டும்” என்று பேசியுள்ளார். இதற்கு பிரதமரின் ரியாக்‌ஷன் என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஒருநாளில் மட்டும் 6 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் தெலுங்கானா மாநிலத்தில் அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொண்டார். அதில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.அந்த மேடையில், பிரதமர் மோடியின் குஜராத் மாடலை காங்கிரஸ் முதல்வர் பாராட்டி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது

அவர் பிரதமர் மோடியை ‘அண்ணா’ என அழைத்தர். பேச்சைத் தொடர்ந்த ரேவந்த ரெட்டி, “நம் மாநிலம் முன்னேற்றத்தை விரும்பினால், குஜராத்தைப் போல முன்னேற வேண்டும். பிரதமரின் உதவியால், ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வரும் தனது மாநிலத்தில் சில முன்னேற்றங்களைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

ரூ.56,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மாநிலத்துக்கு பிரதமர் இன்று பரிசாக வழங்கினார். குஜராத்தைப் போல தெலங்கானா வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ பிரதமர் மோடியின் ஆதரவைக் கோரியிருப்பதால், மத்திய அரசுக்கு எதிராக போராட மாட்டேன். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற உதவ விரும்புகிறேன். ஹைதராபாத் மற்றும் தெலங்கானா ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசுக்கு உதவ வேண்டும்” எனப் புகழ்ந்து பேசினார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, “ஒரு மாநிலத்தின் பொறுப்பான மற்றும் அரசியல் பண்புள்ள முதல்வர், நாட்டின் பிரதமருடன் கூட்டாட்சி அமைப்பில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். அரசியலைவிட மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இளைய முதல்வராக இருக்கும் ரேவந்த ரெட்டியிடம் இந்தப் பணபை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என விமர்சித்திருந்தார்.

வியூகத்தை மாற்றும் தெலங்கானா முதல்வர்! - முன்னாள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவுடன் நெருக்கமான உறவில் இருந்தார். பின்னர், பாஜக உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, அவர் விலகினார். அதுமட்டுமில்லாமல், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளைத் தவிர்த்து, தீவிரமான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், அதற்கு நேர்மாறான அரசியல் செய்கிறார் ரேவந்த்.

மேலும், பாஜகவுக்கு எதிராக அரசியல் புரியும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி, மத்திய அரசிடம் சமரச நிலைப்பாட்டை அறிவித்து அதன்படி செயலாற்றியும் வருகிறார். தெலங்கானாவில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களுடன் சந்திப்புகள் என ரேவந்த் ரெட்டியின் அணுகுமுறை மற்ற காங்கிரஸ் முதல்வர்களோடு ஒப்பிடுகையில் மாற்றியுள்ளது.

இவரின் இந்த இணக்காமான பேச்சு, மோடியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியும் ரேவந்த பேசும்போது ஆச்சரியம் கலந்த பார்வையில் அவரைக் கவனித்தார்.

யார் இந்த ரேவந்த ரெட்டி? - ரேவந்த் ரெட்டியின் அரசியல் பயணம் ஆர்எஸ்எஸ் மாணவர் அணியான ஏபிவிபி-யில் இருந்துதான் தொடங்கியது. பின்னர், 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டிலும் வெற்றி பெற்ற அவர், 2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்.

தன்னை ஒரு களப்போராளியாக தலைமைக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டார். இதனால், 2021-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த மூன்றே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை வெல்ல வைத்து, ஆட்சிக் கட்டியலில் அமரவைத்தார். பின் அவர் முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏனெனில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரேவந்த ரெட்டியின் பங்கு காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியமானது. அவரின் வியூகங்கள்தான் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கி மாபெரும் கூட்டம் வரை அனைத்து வகைகளும் காங்கிரஸை மக்களிடம் கொண்டு சேர்த்தார் ரேவந்த் ரெட்டி. இந்த நிலையில், பாஜகவுடன் அவர் நெருக்கமான உறவைக் கையாள்வது விமர்சனமாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x