Published : 04 Mar 2024 04:04 PM
Last Updated : 04 Mar 2024 04:04 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் முதல் பெயர் பட்டியலை பாஜக நேற்று முன்தினம் வெளியிட்டது. அவர்களில் போபால் எம்.பி. பிரக்யா தாக்குர், டெல்லி எம்.பி.க்கள் ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா உட்பட சிலர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதன் காரணமாக அவர்களுக்கு இந்த முறை ‘சீட்’ வழங்கவில்லை.
‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தேசப் பற்றாளர்’ என்று பிரக்யா தாக்குர் பேசியிருந்தார். அதற்கு பிரதமர் மோடியே கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரக்யாவுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் தீவிரவாத தடுப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே உயிரிழந்தார்.
தனது சாபத்தால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று பிரக்யா கூறியிருந்தார். அந்த கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் அப்போது கடும் அதிருப்தி அடைந்தனர். இதுபோன்ற காரணங்களால் போபாலில் பிரக்யா தாக்குருக்குப் பதில் அலோக் சர்மாவை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஸ் சாகிப் சிங் வர்மா. இந்தத் தொகுதியில் 2 முறை எம்.பி.யாக இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு ஷாகின் பாக்போராட்டத்தின் போது இவர் சர்ச்சைக் குரிய வகையில் கருத்துகளை கூறி சிக்கினார். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை கூறி கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.
இதனால் இந்த முறை பர்வேஸுக்கு பாஜக சீட் வழங்கவில்லை. தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மக்களவையில் பேசும்போது, அமோரா எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக கடுமையாக பேசினார். அவருக்கும் சீட் வழங்கப்படவில்லை.
33 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 33 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பாஜக கருத்து கணிப்பு நடத்தியது. இதில், மக்களுடனான தொடர்பில் இருந்து விலகி இருத்தல், தொகுதி மக்களின் வெறுப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக தற்போதைய எம்.பி.க்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சி மேலிடம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அசாமில் அறிவிக்கப்பட்ட 11 மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்களில் 6 பேர் மட்டுமே இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். அதேபோன்று, சத்தீஸ்கரில் 11 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் 4 பேர் புதியவர்கள். ஜான்ஜ்கிர் சம்பா (எஸ்சி) தொகுதியில் தற்போதைய எம்.பி. குஹராம் அஜ்கலிக்கு பதிலாக கமலேஷ் ஜங்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 15 மக்களவை தொகுதிக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இதில், 5 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோன்று மத்திய பிரதேசத்திலும் 7 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT