Published : 04 Mar 2024 03:40 PM
Last Updated : 04 Mar 2024 03:40 PM
புதுடெல்லி: “நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். லாலுவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், அவர் இதைக் கூறினார்.
தெலங்கானாவின் அடிலாபாத் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தீவிரமான ஊழல்வாதிகளாகவும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களாகவும், தாஜா அரசியல் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அச்சமடைந்திருக்கிறார்கள். அதனால்தான், நான் குடும்ப ஆட்சி என்ற கூறுவதை வைத்து மோடிக்கு குடும்பமே இல்லை என பேசுகிறார்கள்.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான். நாட்டின் ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். யாருமே இல்லாதவர்கள்கூட அவர்களும் மோடிக்கு சொந்தமானவர்கள். அவர்கள் மோடி குடும்பம் என சொல்கிறார்கள்.
என்னைப் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனது ஒவ்வொரு செயலையும் அவர்கள் நன்கு அறிவார்கள். சில நேரங்களில் நான் நள்ளிரவைத் தாண்டியும் பணியாற்றிக் கொண்டிருந்தால் அதுவும் செய்தியாகிவிடுகிறது.
நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். கடினமாக உழைக்காதீர்கள்; சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என அவர்கள் எனக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கவே நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் எனது நாட்டுக்காக; எனது குடும்பத்துக்காக வாழ்கிறேன். உங்களுக்காகவே நான் வாழ்கிறேன். உங்களுக்காகவே நான் போராடுகிறேன். உங்கள் கனவை நனவாக்கவே நான் உழைக்கிறேன்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான தங்கள் கருத்துக்களை 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். இதற்கான செயல் திட்டத்தில் 3.75 லட்சம் பேர் பங்கேற்றுள்ளார்கள். இதற்காக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. 1,200 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 11 லட்சம் இளைஞர்கள் இந்த பயணத்தில் இணைந்திருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
கடந்த 15 நாட்களில் மட்டும், உலகின் மிகப் பெரிய சேமிப்பு கிடங்களை தொடங்கிவைத்திருக்கிறோம், 18,000 கூட்டுறவு நிறுவனங்களை கணினிமயமாக்கி இருக்கிறோம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன/துவக்கிவைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த ரூ. 1.5 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பு கொண்ட திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.
மோடி பேச்சின் பின்னணி: பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், "குடும்ப ஆட்சி என்று நரேந்திர மோடி தாக்கி வருகிறார். உங்களுக்கு குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை நீங்கள்(மோடி) சொல்ல வேண்டும்?
பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? உங்களுக்கு (மோடிக்கு) குடும்பம் இல்லை. நீங்கள் இந்துவும் கூட இல்லை. ஏனெனில், தாய் இறந்துவிட்டால் மகன் தனது தலையையை முகத்தை மழித்துக் கொள்வார்கள். நீங்கள் அதைச் செய்தீர்களா? இல்லையே" என்று விமர்சித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT