Last Updated : 08 Aug, 2014 12:00 AM

 

Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

மேலும் 5 போலீஸாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக போலீஸார் ஐந்து பேருக்கு உதவி ஆய்வாளர் பதவி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997-98-ம் ஆண்டு நடந்த நேரடி உதவி ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) தேர்வில் பங்கேற்ற சிலர் தங்களுக்கு தகுதி இருந்தும் உதவி ஆய்வாளர் பணி வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 11 போலீஸாருக்கு நேரடி உதவி ஆய்வாளர் பணி வழங்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இதேபோன்று, மேலும் ஏழு பேர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர், ரோஹின்டன் நரிமன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் அவர்கள் ஏழு பேரின் மதிப்பெண் விவரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

நேரடி உதவி ஆய்வாளர் நியமனம் குறித்து இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஏழு பேர் தங்கள் பெயர் விடுபட்டதாக மனு தாக்கல் செய்துள்ளனர். தர வரிசைப் பட்டியலில் இவர்களது மதிப்பெண்களை சரிபார்த்ததில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20.5625 மதிப்பெண்வரை பணி வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20.3750 மதிப்பெண் வரையிலும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 18.0625 மதிப்பெண் வரையிலும் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் அடிப்படை யில் பார்த்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மூன்று பேரும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருவரும் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் உதவி ஆய்வாள ராக நியமிக்கப்பட தகுதி உடைய வர்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஒருவரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் ஒருவரும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை விட குறைவாக இருப்பதால், அவர்களுக்கு பணி வழங்க முடியாது.

எனவே, ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ள இந்த ஐந்து பேருக்கும் நேரடி உதவி ஆய்வாளர் பணி வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம். ஏற்கெனவே, 11 பேருக்கு பணி வழங்க பிறப்பிக்கப்பட்ட மற்ற நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸார் சண்முகம், பிச்சாண்டி, முருகன், பாலமுருகன், இளமாறன் ஆகிய ஐந்து பேர் உதவி ஆய்வாளர்களாக நேரடியாக நியமனம் பெற உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x