Published : 07 Feb 2018 10:37 AM
Last Updated : 07 Feb 2018 10:37 AM
குஜராத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும், 'மென்மையான இந்துத்துவா' பாணி அரசியலை கையிலெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு 4 கோயில்களில் வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்றாலும் அங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு எதிரான இந்து எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க அங்கு, ராகுல் காந்தி பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு அவர் சென்றதை பாஜக கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸின் இந்த 'மென்மையான இந்துத்துவா அரசியல்' அக்கட்சிக்கு குஜராத் தேர்தலில் கைகொடுத்தாக கூறப்படுகிறது.
லிங்காயத் சமூகம்
இந்நிலையில் கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு எதிர்க்கட்சியான பாஜக ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முதல்கட்ட பிரச்சாரம் செய்துள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு விரைவில் முதல்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவரது தேர்தல் பிரச்சார பயணத்தின்போது, 4 கோயில்களில் சென்று வழிபாடு நடத்தி அவர் திட்டமிட்டுள்ளார். வடக்கு கர்நாடகாவில் செல்வாக்கு பெற்ற லிங்காயத் சமூக மக்கள் வழிபடும் கவி சித்தேஷ்வர் மடத்திற்கும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா அனுபவ் மண்டபத்திற்கும் அவர் செல்கிறார்.
லிங்காயத் சமூக மக்கள் பாஜகவுக்கு அதிகமாக வாக்களித்து வரும் நிலையில், அவர்களது வாக்குகளை கவரும் வகையில் ராகுல் காந்தியின் பயணம் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. லிங்காயத் சமூக மக்களை ஈர்க்கும் வகையில் முதல்வர் சித்தராமையா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். லிங்காயத்தை தனி சமயமாக அறிவிக்கக் கோரி காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபோலேவ கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக சென்ற வழிபடும் கோப்பலில் உள்ள ஹூலிகம்மா கோயிலுக்கும் செல்கிறார். குஜராத்தில் இந்து வாக்குகளை கவர்வதற்காகவே ராகுல் கோயில்களுக்கு சென்றதாக பாஜக விமர்சித்துள்ளது. எனவே கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது, கல்பர்கியில் உள்ள கவாஸ் பாண்டே நவாஸ் தர்காவிற்கும் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
கோயில் பயணம்
முதல் கட்டமாக அவர் வடக்கு கர்நாடகாவில் பிரச்சாரம் செய்வதால் அங்குள்ள கோயில்களுக்குச் செல்கிறார். தெற்கு கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும்போது அங்குள்ள கோயில்களுக்கும் ராகுல் காந்தி செல்வார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸும், முதல்வர் சித்தராமையாவும் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா ஏற்கெனவே பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
மைசூரு சாமுண்டிதேவி கோயில், சாம்ராஜ் நகர் மல்லேஸ்வரா கோயில், மஞ்சுநாததேஸ்வரா கோயில், மங்களூரு ராஜேஸ்வரி அம்மன் கோயில், தவன்கரேயில் உள்ள துர்காம்பிகா கோயில், பிடாரில் உள்ள சங்கமேஸ்வரா கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சித்தராமையா சென்று வந்தார். இதுபோலவே, சித்தராமையா பெயரிலேயே ராமர் இருப்பதால் அவர் உண்மையான இந்து என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி பிரச்சாரம் செய்கின்றனர்.
இதுபோலவே காங்கிரஸைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர்களும், பாஜகவின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT