Published : 03 Mar 2024 01:09 PM
Last Updated : 03 Mar 2024 01:09 PM
குவாலியர்: "கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் நாம் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளோம். இந்த பயணத்தில் நாம் நீதியைச் சேர்த்துள்ளோம். வெறுப்புணர்வால் நாட்டில் அநீதி பெருகியுள்ள காரணத்தால் நாம் நீதி என்ற வார்த்தையைச் சேர்ந்துள்ளோம். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் இரண்டு மடங்காக உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்து மோடி சிறுதொழில்களை அழித்துவிட்டதால், பாகிஸ்தான், பூடான், வங்கதேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.
நாட்டில் 50 சதவீதம் ஓபிசி, 15 சதவீதம் தலித், 8 சதவீதம் பழங்குடியினர் என மொத்தமாக 73 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஓபிசி, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்க முடியாது. நாம் சாதிவாரிக் கணக்கெடுக்கைப் பற்றி பேசும் போதெல்லாம், நாட்டில் ஏழை பணக்காரன் என இரண்டு சாதிகள் மட்டுமே இருப்பதாக மோடி சொல்வார். நாட்டிற்கு யார் எவ்வளவு பங்களிப்புச் செய்கிறார்கள் என்ற உண்மையை 73 சதவீத மக்கள் அறிந்து கொள்வதை மோடி விரும்பவில்லை. முன்பெல்லாம் நமது இளைஞர்கள் கடுமையாக உழைத்து ராணுவத்தில் சேர்ந்து மரியாதையைப் பெற்றார்கள். அக்னி வீரர்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நமது ராணுவ வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். இதுமிகவும் அநியாயம்.
பாஜக அரசு கோடீஸ்வரர்களின் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்தது. அந்தப் பணங்கள் எல்லாம் மக்களின் பணங்கள். வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்டவை. கோடீஸ்வர்களின் லட்சக்கணக்கான கடன்களை மோடி அரசால் தள்ளுபடி செய்ய முடியும் என்றால் விவசாயிகளின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?" இவ்வாறு அவர் பேசினார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, கடந்த ஜன.14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த யாத்திரை மொத்தம் 67 நாட்களில், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டப்பேரவைத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ., தூரம் பயணித்து மார்ச் 20-ல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT