Published : 03 Mar 2024 06:06 AM
Last Updated : 03 Mar 2024 06:06 AM
மும்பை: சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
தெற்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான மால்டாவை சேர்ந்தசரக்கு கப்பல் சீனாவின் ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு புறப்பட்டது. இந்த சரக்கு கப்பல் கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்தியாவின் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்த கப்பலில் 22,180 கிலோ எடையுள்ள தளவாடங்கள் இருந்தன. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது சந்தேகம் எழுந்தது. உடனடியாக பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) சேர்ந்தநிபுணர்கள் மும்பை துறைமுகத்துக்கு வந்து சந்தேகத்துக்குரிய தளவாடங்களை ஆய்வு செய்தனர்.
சரக்கு கப்பலில் தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின்மூலம் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்ட முடியும். சம்பந்தப்பட்ட தெர்மோஎலெக்ட்ரிக் தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மால்டாவை சேர்ந்த சரக்கு கப்பல் மட்டும் விடுவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அந்த நாட்டுக்கு தேவையான அணு ஆயுததளவாடங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சார்பில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தளவாடங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூனில் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
ஆனால் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் என்ற பெயரில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது.
தற்போது சீனாவை சேர்ந்த ஷாங்காய் ஜேஎக்ஸ்இ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் விங்ஸ்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தளவாடங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
சீனா அனுப்பிய தளவாடங்கள் மூலம் அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தயாரிக்க முடியும்.
சர்வதேச சட்ட விதிமீறல்: கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் சீனாவின் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட ஏவுகணை தயாரிப்புக்கு தேவையான தளவாடங்கள் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தளவாடங்களை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பி வைத்திருக்கிறது. மும்பை சுங்கத் துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதே வகை அணுஆயுத தளவாடங்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. அந்த நாட்டுக்கும் சீனாவே மறைமுகமாக உதவி செய்து வருகிறது.
அணு ஆயுத தளவாடங்களை சரக்கு கப்பலில் அனுப்பியது சர்வதேச சட்ட விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT