Published : 03 Mar 2024 05:49 AM
Last Updated : 03 Mar 2024 05:49 AM

2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு: 195 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

பிரதமர் மோடி மற்றும் நட்டா | கோப்புப்படம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி இரவு டெல்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னிரவு வரை நடந்த இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

28 பேர் பெண்கள்:இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி தலைமை நேற்று வெளியிட்டது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் பட்டியலை வெளியிட்டார்.

இதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உத்தர பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அமித் ஷா, ராஜ்நாத் சிங்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா–காந்தி நகர் (குஜராத்), மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்- லக்னோ (உத்தர பிரதேசம்), முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்–விதிஷா (மத்திய பிரதேசம்), திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லவ் தேவ்–திரிபுரா மேற்கு, மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா–குணா ( மத்திய பிரதேசம்), மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி–அமேதி (உத்தர பிரதேசம்), மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா–போர்பந்தர் (குஜராத்), மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு–அருணாச்சல் கிழக்கு, மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்–திப்ருகார் (அசாம்), மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் – உதம்பூர் (காஷ்மீர்), மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்–பிகானீர் (ராஜஸ்தான்), மத்திய அமைச்சர் பூபேந்திர் யாதவ்–அல்வார் (ராஜஸ்தான்), மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்–ஜோத்பூர் (ராஜஸ்தான்), மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா - கோட்டா (ராஜஸ்தான்), நடிகை ஹேமமாலினி - மதுரா (உத்தர பிரதேசம்), நடிகர் ரவி கிஷண்- கோரக்பூர் (உத்தர பிரதேசம்), போஜ்புரி நடிகர் தினேஷ் லால் யாதவ்–அசம்கர் (உத்தர பிரதேசம்) பின்னணி பாடகர் மனோஜ் திவாரி- டெல்லி வடகிழக்கு, நடிகை லாக்கெட் சாட்டர்ஜி–ஹூக்ளி (மேற்குவங்கம்), மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ்- புதுடெல்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர்களில் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.

கேரளாவின் 12 வேட்பாளர்கள்: கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி, காசர்கோடு- அஸ்வினி, கண்ணூர் -ரகுநாத், வடகரா- பிரபுல்ல கிருஷ்ணா, கோழிக்கோடு- எம்.டி.ரமேஷ், மலப்புரம்–அப்துல் சலாம், பொன்னானி – நிவேதிதா சுப்பிரமணியன், பாலக்காடு- சி.கிருஷ்ணகுமார், திருச்சூர்- நடிகர் சுரேஷ் கோபி, ஆலப்புழா- ஷோபா சுரேந்திரன், பத்தினம்திட்டா- அனில் அந்தோணி, ஆற்றிங்கல்- மத்திய அமைச்சர் முரளிதரன், திருவனந்தபுரம்- மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தெலங்கானாவின் 9 வேட்பாளர்கள்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி கரீம் நகர்- சஞ்சய் குமார், நிஜாமாபாத் -அரவிந்த் தர்மபுரி, ஜாகீராபாத் பி.பி.பாட்டீல், மல்காஜ்கிரி–ராஜேந்தர், செகந்திராபாத்–மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, ஹைதராபாத்- மாதவி லதா, செவல்லா- கொண்டா விஸ்வேஸ்வரர் ரெட்டி, நகர்கர்னூல்- பாரத், போங்கிர்- போரா நரசய்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் 10-ம் தேதி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், 21-ம்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகக்கூடும் என தெரிகிறது. இதில் தமிழக வேட்பாளர்கள் பட்டியல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாராணசியில் 3-வது முறை.. 2014-ல் முதல்முறையாக வாராணசி தொகுதியில் போட்டியிட்டார் பிரதமர் மோடி. அவரை எதிர்த்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது பிரதமர் மோடி 56.37% வாக்குகளை பெற்றார். 2-வது இடம் பெற்ற கேஜ்ரிவாலுக்கு 20% வாக்குகள் கிடைத்தன.

2019-ல் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் ஷாலினி யாதவ் போட்டியிட்டார். அப்போது பிரதமர் மோடி 63.6% வாக்குகள் பெற்று வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x