Published : 03 Mar 2024 06:48 AM
Last Updated : 03 Mar 2024 06:48 AM

அம்பானி இல்லத் திருமண முன்வைபவ நிகழ்ச்சிகள்: ஜாம்நகரில் சர்வதேச விமானங்கள் தரையிறங்க அனுமதி

ஜாம்நகர்: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல்3-ம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய சிறப்பு வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில், இவர்களின் திருமண தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறும் திருமண முன் வைபவ விழாவில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும்உலகளாவிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் லாரி உள்ளிட்டோர் வந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும், தொழிலதிபர்களும் திருமணநிகழ்வில் பங்கேற்றனர்.

அம்பானி இல்லத் திருமண விழாவால் குஜராத்தின் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்டு ஜாம்நகரில் சர்வதேச விமானங்கள் தரையிறங்க மத்திய அரசு 10 நாட்களுக்கு தற்காலிகமாக அனுமதியை வழங்கியுள்ளது.

அதன்படி, ஜாம்நகர் விமானநிலையத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்களை வரவேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் விமான நிலையமானது மத்திய பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனினும், ஒரு பயணிகள் முனையமும் அங்கு செயல்படுகிறது. இந்நிலையில் அம்பானி இல்லதிருமண விழாவுக்காக மத்திய அரசு இந்தச் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

வழக்கமாக 6 சிறிய விமானங்களை மட்டும் கையாளும் திறன்கொண்ட இந்த விமான நிலையத்தில்நேற்று ஒரு நாள் மட்டும் 140 விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அங்கு மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சுங்கப் பிரிவு, குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என்பதைக் கண்டறியவும், சோதனைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x