Published : 28 Feb 2018 02:25 PM
Last Updated : 28 Feb 2018 02:25 PM

சாதாரண பக்தரைப் போல் ஏழுமலையானை தரிசித்த மொரீஷியஸ் துணை அதிபர்

 

மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை ஒரு சாதாரண பக்தரைப் போல் வரிசையில் சென்று தரிசனம் செய்தார்.

மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலை வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர், சாதாரண பக்தனைப் போல், வரிசையில் நின்று சுவாமியை மகாலகு தரிசனம் மூலம் தரிசித்து வழிபட்டார்.

பின்னர் அவருக்கு தேவஸ்தானத்தினர் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

அதன் பின்னர் துணை அதிபர் பரமசிவம் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மொரீஷியஸ் நாட்டில் பெரும்பான்மையான இந்தியர்கள் வசிக்கின்றனர். இதனால், 108 அடி உயர ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன். இந்தியாவில் குறிப்பாக தமிழகம், ஆந்திராவில் தொழில் தொடங்க எங்கள் நாட்டில் உள்ள பல முதலீட்டார்கள் தயாராக உள்ளனர்.

எங்கள் நாட்டில் சினிமா தொடர்புள்ள பணிகளுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. இதனை இந்தியத் திரையுலகினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மொரீஷியஸில் வசிக்கும் தமிழர்கள் தங்களது கலாச்சாரம், பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என மொரீசியஸ் துணை அதிபர் பரமசிவம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x