Published : 19 Feb 2018 06:04 PM
Last Updated : 19 Feb 2018 06:04 PM
மாட்டிறைச்சி சாப்பிட விருப்பமாக இருந்தால், சாப்பிடலாம், முத்தம் கொடுக்கணுமா கொடுங்கள், எதற்காக விழா எடுத்து கொண்டாடுகிறீர்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் உள்ள ஆர்.ஏ.போடார் காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லூரியின் 75-ம் ஆண்டு விழா இன்று நடந்தது. அதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, மாட்டிறைச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசியதாவது:
''உங்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிட விருப்பமா? தாராளமாக சாப்பிடுங்கள். எதற்காக விழா எடுத்து கொண்டாடுகிறீர்கள். அதேபோலத்தான் முத்தத் திருவிழா.
உங்களுக்கு யாருக்கேனும் முத்தம் கொடுக்க விருப்பமாக இருந்தால், முத்தம் கொடுங்கள், அதற்கு திருவிழா தேவையா? யாரிடமும் அனுமதி கேட்க வேண்டுமா?
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர் அப்சல் குரு.அவரை சிலர் கொண்டாடுகிறார்கள். இங்கே என்ன நடக்கிறது?. நமது நாடாளுமன்றத்தையே தகர்க்க துணிந்தவர்கள். அவருக்கு ஆதரவாக மாணவர்கள் சிலர் பேசுகிறார்கள்.''
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யத்தடை விதித்த போது, சென்னையில் ஐஐடியில் ஜூலை மாதம் மாட்டிறைச்சி திருவிழாவை மாணவர்கள் நடத்தினார்கள். இதைக் குறிப்பிட்டுதான் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.
இதற்கு முன் மாட்டிறைச்சி தடை குறித்து வெங்கய்ய நாயுடு பேசுகையில், ''உணவு என்பது தனிமனிதர்கள் விருப்பம். நான் நன்றாக அசைவ உணவு சாப்பிடக்கூடியவன். என்னிடம் வந்து யாரும் என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது எனக் கூற முடியாது'' எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT