Published : 02 Mar 2024 09:38 PM
Last Updated : 02 Mar 2024 09:38 PM
195 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 டெல்லியில் 5 , ஜம்மூ காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல் பிரதேசத்தில் 2, கோவா, திரிபுரா ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தமாக 195 வேட்பாளர்களை முதல்கட்டமாக அறிவித்துள்ளது பாஜக.
இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தமுள்ள 195 பேரில் 28 பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள், 57 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள், 27 பட்டியலின வேட்பாளர்கள், 18 பழங்குடியின வேட்பாளர்கள் ஆவர்.
நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்? - பிரதமர் மோடி உத்தரப் பிரதேசம் வாரணாசியிலிருந்து போட்டியிடுகிறார். கடந்த 2014, 2019 ஆகிய இடண்டு மக்களவைத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில்தான் மோடி போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது, 3-வது முறையாக வாரணாசியில் போட்டியிடவிருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகரிலிருந்து போட்டியிருகிறார். இவரும் கடந்த முறை இந்தத் தொகுதியில்தான் போட்டியிட்டார்.
சமீபத்தில்தான் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தான் அரசியல் விட்டு விலகப் போவதாக அறிவித்திருந்தார். எனவே, அவர் கடந்த முறை போட்டியிட்ட மேற்கு டெல்லி தொகுதி, முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி மலையாள நடிகரான சுரேஷ் கோபிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரின் மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது குறிப்பிடதக்கது.
உத்தரப் பிரதேசம் மாதுரா தொகுதி ஹேமமாலினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் ஹேமமாலினி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றி எம்பி ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி மீண்டும் ஸ்மிதி இராணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது.
அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியில் மத்திய அமைச்சர் சர்பனந்த சோனாவால் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் களமிறங்குகிறார்.
இப்படியாக, முக்கியமானவர்கள் உள்ளடக்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைப் பாஜக வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யாத மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்னும் வரும் நாட்களில் அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT