Published : 02 Mar 2024 07:15 PM
Last Updated : 02 Mar 2024 07:15 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். “195 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் தற்போது முடிவாகி இருக்கிறது. இது பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல். 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேட்பாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, டெல்லியில் 5, கோவா மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த முதல்கட்ட பட்டியலில் மத்திய அமைச்சர்கள் 34 பேர், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 28 பெண் வேட்பாளர்கள், 47 இளம் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலும், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அசாமின் திப்ருகர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சலப் பிரதேசம் (மேற்கு) தொகுதியிலும் போட்டிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்:
டாக்டர் அப்துல் சலாம் - கேரளாவின் மலப்புரம், எம்.டி.ரமேஷ் - கோழிக்கோடு, அஷ்வினி - காசர்கோடு, ரகுநாத் - கன்னூர், பிரபுல்ல கிருஷ்ணா - வடகரா, நிவேதிதா சுப்ரமணியன் - பொன்னானி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதையே கட்சி சங்கல்பமாக எடுத்துள்ளது” என்று வினோத் தாவ்டே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT