Published : 02 Mar 2024 12:17 PM
Last Updated : 02 Mar 2024 12:17 PM

பெங்களூரு குண்டுவெடிப்பு | முதல்வர் சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை

கர்நாடக முதல்வர் சித்தராமையா | கோப்புப் படம்.

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளை மாநில முதல்வர் சித்தராமையா இன்று (சனிக்கிழமை) மதியம் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக, பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் உள்பட மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சமபவம் தொடர்பாக இன்று முதல்வர் தலைமையில் காவல் உயர் அதிகாரிகளுடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதை மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரவேஸ்வரா உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பெங்களூரு குண்டுவெடிப்புத் தொடர்பாக இன்று மதியம் 1 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. முதல்வர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நாங்கள் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளோம். கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் நாங்கள் சில ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். சம்பவம் நடைபெற்ற போது, 26 பெங்களூரு மாநகரப் பேருந்துகள் அந்த வழியாக சென்றிருக்கின்றன. அந்த நபர் பேருந்தில் வந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அப்பேருந்து தொடர்பாக கண்காணிப்பு காமிரா காட்சிகளைச் சோதனை செய்கிறோம்.

விரைவில் நாங்கள் குற்றவாளிகளை கைது செய்வோம். எங்களின் குழுக்கள் சிறப்பாக செயல்படும். வெடிகுண்டை வெடிக்கச் செய்ய டைமர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை எஃப்எஸ்எல் குழு ஆய்வு செய்கிறது. எந்த அமைப்பு இதனைச் செய்துள்ளது என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது இல்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. கடந்த 2022-ல் குக்கர் குண்டுவெடிப்பு நடந்த போது அவர்கள் ராஜினாமா செய்தார்களா? எல்லாவற்றிக்கும் அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிவருகிறார்கள். நமக்கு சில பொறுப்புகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என நான் எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எஃப்எஸ்எல், என்எஸ்ஜி, வெடிகுண்டு செயலிழக்கச்செய்யும் குழு மற்றும் மோப்ப நாய் குழு போன்றவை சம்பவம் நடந்த இடத்தில் சனிக்கிழமை காலையில் ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x