Published : 01 Mar 2024 06:26 PM
Last Updated : 01 Mar 2024 06:26 PM
புதுடெல்லி: குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியாயங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "குஜராத்தில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் மாணவர்கள். குஜராத் சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரம் இது. இந்த செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, மிகப் பெரிய கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
விரக்தி, நம்பிக்கையின்மை மற்றும் நிவர்த்தி செய்யப்படாத குறைகளுடன் மக்கள் போராடுவதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னேற்றம், செழிப்பு என்று பெருமை பேசும் ஒரு மாநிலத்தில், குடிமக்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது. நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியாயங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.
மாநில மற்றும் மத்திய அரசுகளின் காலி பணியிடங்களை நிரப்புவோம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தனது சொந்த மாநிலத்தில் நடந்த இந்த மிகத் துயரமான மனிதப் பேரவலம் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர் பூபேந்திர படேல் இந்த நெருக்கடியை ஒப்புக்கொண்டது கண்டனத்திற்குரியது என்றாலும், ஆட்சியின் அடிப்படைத் தோல்வியை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தற்கொலைச் சம்பவங்கள் தடுக்கக்கூடியவையே. இருந்தும், அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முன்கூட்டியே எடுக்காமல் இருந்துள்ளது. தற்கொலைகளைத் தடுக்க வேண்டியதன் தீவிரத்தை குஜராத் அரசு உணராமல் இருப்பதையே இது காட்டுகிறது. குஜராத் மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த தற்கொலை பிரச்சினைக்குத் உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று கார்கே கூறியுள்ளார்.
இதனிடையே, மனநல பிரச்சினைகள், காதல் பிரச்சினைகள், கடுமையான நோய், குடும்ப பிரச்சினைகள், நிதி நெருக்கடி, தேர்வில் தோல்வி பயம் ஆகியவையே தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT