Published : 01 Mar 2024 04:47 PM
Last Updated : 01 Mar 2024 04:47 PM
தான்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய எதிரிகள்” என்று பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் ரூ,35 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரிகள். கடந்த நூற்றாண்டின் இறுதியில் வடக்கு கரண்புராவில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அவர் அறிவித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
2014-ல் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அந்தத் திட்டத்தை செயல்படுத்த வாக்குறுதி அளித்தேன். இன்று இங்கே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த மின் நிலையத்தால் ஒளிர்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சி பெறவும், சட்டம் - ஒழுங்கு சீராகவும் இங்கே ஒரு நேர்மையான அரசு அமைவது அவசியம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் அரசு இங்கே வாரிசு அரசியல் செய்கின்றன. இந்த ஆட்சியின் கீழ் பணப்பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கே அதிகாரத்தில் உள்ளவர்கள் மலைபோல் சொத்துகளைக் குவித்துள்ளனர். ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் என்றால் நிலக்கரி குவியல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்கே காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஒருவர் வீட்டில் குவியல் குவியலாக பணம்தான் கிடைத்தது. அவையெல்லாம் மக்களாகிய உங்களின் பணம். உங்கள் பணத்தை சூறையாடியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.
ஜார்க்கண்டின் பழங்குடியின மக்களை காங்கிரஸ் - ஜேஎம்எம் கட்சியினர் வெறும் வாக்கு வங்கிகளாகவே பார்த்துள்ளனர். ஆதிவாசிகள் முன்னேற அவர்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் உங்கள் எதிர்காலத்துக்காக இருக்கிறேன். நீங்கள் எனது மக்கள். உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT