கோப்புப்படம்
கோப்புப்படம்

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை 6 மாதங்களில் தானாக ரத்து ஆகாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

Published on

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை உத்தரவு 6 மாதங்களில் தானாக ரத்து ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏசியன் ரீசர்பேசிங் ஆப் ரோட் ஏஜென்சியின் இயக்குநர் மற்றும் சிபிஐ தொடர்பான வழக்கில் கடந்த 2018 டிசம்பர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் “சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை உத்தரவு 6 மாதங்களைக் கடந்ததும் தானாக ரத்தாகிவிடும்" என்று கூறப்பட்டது.

மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா,பர்திவாலா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஏசியன் ரீசர்பேசிங் ஆப் ரோட் ஏஜென்சி வழக்கில் கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை உத்தரவு 6 மாதங்களில் தானாக ரத்து ஆகாது. 6 மாதங்களை கடந்த பிறகும் இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கும். சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களே இடைக்கால தடை உத்தரவு குறித்து இறுதி முடிவெடுக்கும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடுவதை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே வழக்கின் உண்மையான நிலவரம் தெரியும். மிக முக்கியமான வழக்குகளில் மட்டும் தீர்ப்பு வழங்க காலக்கெடுவை நிர்ணயிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in