Published : 29 Feb 2024 03:35 PM
Last Updated : 29 Feb 2024 03:35 PM
ஆஜ்மீர்: 1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆகஸ்ட் 16-ம் தேதி நேபாள எல்லையான பன்பாஸாவில் அப்துல் கரீம் துண்டாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த துண்டா தற்போது அவருடைய 80-வது வயதில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான் (70), ஹமீதுதீன் (44) ஆகியோர் ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று (பிப்.29) காலை 11.15 மணியளவில் துண்டா, இர்ஃபான், ஹமீதுதின் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் தடா (TADA) நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதனையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப்டிருந்தன.
குற்றச்சாட்டு என்ன? - 1993 டிசம்பர் 6-ஆம் தேதி லக்னோ, கான்பூர், ஹைதராபாத், சூரத் மற்றும் மும்பை நகரங்களில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. 5 நகரங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றது.
ஐந்து நகரங்களிலும் நடந்த வழக்கை ஒன்றிணைத்து ஆஜ்மீர் தடா நீதிமன்றத்துக்கு 1994-ல் அனுப்பியது. அதிலிருந்து இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜ்மீர் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அப்துல் கரீம் துண்டாவை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
இர்ஃபான், ஹமீதுதீனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார். இர்ஃபானுக்கு 70 சதவீத பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர் 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டார். அதன் அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT