Published : 29 Feb 2024 10:48 AM
Last Updated : 29 Feb 2024 10:48 AM

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி; பலர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

போபால்: மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியில் புதன்கிழமை இரவு சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தேவேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு சரக்கு வாகனத்தில் ஏறி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த வாகனம், திண்டோரி மாவட்டம் பட்ஜார் கிராமத்துக்கு அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அதிகாலை 1.30 மணிக்கு நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சமூக நல மையத்துக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவராணம் அறிவித்துள்ளார். நிலவரத்தை மதிப்பீடு செய்வதற்காக மாநில அமைச்சர் சம்பதியா உய்கி தண்டோரிக்குச் செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “திண்டோரி மாவட்டத்தில் நடந்த விபத்தில் பல விலைமதிப்பில்லாத உயிர்கள் அகாலமாக பறிபோயிருப்பதற்கு முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கும், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பினைத் தாங்கும் பலத்தினை தருவதற்காகவும் அவர் இறைவனை வேண்டிக்கொள்கிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் படி, அமைச்சர் சம்பதியா உய்கி நிலைமையை மதிப்பீடு செய்ய தண்டோரிக்கு விரைகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x