Published : 29 Feb 2024 07:21 AM
Last Updated : 29 Feb 2024 07:21 AM

மணிப்பூரில் 200 தீவிரவாதிகள் முற்றுகை: போலீஸ் உயரதிகாரி கடத்தல்

இம்பால்: மணிப்பூரில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மொய்ராங்தேம் அமித் சிங்கின் இல்லத்தை செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். அப்போது,வீட்டையும், அங்கிருந்தவர்களையும் தாக்கி காவல் துறை அதிகாரியை கடத்தி சென்றுள்ளனர்.

அதன்பின்னர், குவாகீதெல் கொன்ஜெங் லைக்காய் பகுதியில் அமித் சிங் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ராஜ் மெடிசிட்டியில் அனுமதிக்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியதில் ரபினாஷ் மொய்ராங்தெம் (24), கங்குஜம் பீம்சென் (20) என்ற இருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் உயரதிகாரி கடத்தப்பட்டதற்கான காரணத்தை காவல்துறை அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த கடத்தலின் பின்னணியில் எந்த அமைப்பு செயல்பட்டது என்பதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், மைதேயி பிரிவினரின் அரம்பை டெங்கோல் இயக்கம் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 200பேர் உயிரிழந்துள்ளனர். 50,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x