Last Updated : 29 Feb, 2024 08:13 AM

 

Published : 29 Feb 2024 08:13 AM
Last Updated : 29 Feb 2024 08:13 AM

சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் சித்தராமையா உறுதி

முதல்வர் சித்தராமையா | கோப்புப்படம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டதாக வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானபோது, ‘சையத் நசீர் ஹூசேன் ஜிந்தாபாத்' என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அதேவேளையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பியதாக கன்னட தனியார் சேனல்களில் செய்திகள் வெளியாகின.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட குரல் பதிவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். அதில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மஜத எம்எல்ஏக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x