Published : 28 Feb 2024 07:35 PM
Last Updated : 28 Feb 2024 07:35 PM

2030-க்குள் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ராஞ்சி: 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா தலைநகர் ராஞ்சியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், "இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக உள்ளனர். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நமது நாடும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரம் இன்று உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்புகள் இருப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளும் உள்ளன. மாணவர்களின் பொறுப்பு தங்களுக்கான நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது மட்டுமல்ல; சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு எப்போது வந்தாலும், எனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல உணர்கிறேன். ஜார்க்கண்ட் மக்களுடன், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுடன் எனக்கு நல்ல இணைப்பு உள்ளது. பழங்குடி வாழ்க்கை முறையில் உள்ள பல மரபுகள், மற்ற மக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறைகளை நாம் கற்றுக்கொண்டால், புவி வெப்பமடைதல் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் இந்த வளாகம் பசுமை கட்டடக்கலை கொள்கைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படிப்பு மற்றும் கற்பித்தலுக்கு ஒரு நல்ல சூழலை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் சமூகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன. உள்ளூர் மொழி, இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் சிறப்பு மையங்களை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியக் கலாச்சாரத்தை, குறிப்பாக பழங்குடி சமூகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, ஆய்வு செய்து, பரப்பும் பணியை மேற்கொள்ளும் ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு எனது பாராட்டுக்கள்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x