Published : 28 Feb 2024 12:32 PM
Last Updated : 28 Feb 2024 12:32 PM

அரசியல் நெருக்கடி | அமைச்சர் விக்ரமாதித்ய சிங் விலகல்; காங்., மூத்த தலைவர்கள் இமாச்சல் விரைவு

இமாச்சலப் பிரதேச ஆளுநரை சந்தித்த பாஜக எம்எல்ஏகள்

அகர்தலா: செவ்வாய்க்கிழமை நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகுர், பாஜக எம்எல்ஏக்களுடன்ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை இன்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் தாகுர், “நேற்று பேரவையில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் ஆளுநரிடம் தெரிவித்தோம். நிதி மசோதா தாக்கலின் போது நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் எம்எல்ஏக்களிடம் சபை காவலர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்எல்ஏகள் மற்றும் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏகளை சபாநாயகர் இடைநீக்கம் செய்யலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்கான சட்டபூர்வமான தகுதியை இழந்து விட்டது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக காட்டுகிறது. பெரும்பான்மையை இழந்துவிட்டதால் ஆளுங்கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிக்க நினைக்கிறது.” என்றார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையில் உண்டான இடையூறு காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மாநிலங்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி எம்எல்ஏகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க தவறிவிட்டார். ஆறு காங்கிரஸ் எம்எல்ஏகள் கட்சி மாறி வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்து சிக்கலை சந்தித்துள்ளது.

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவிடம் 25 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தது மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹுடா மற்றும் டி.கே. சிவகுமாரை மாநிலத்துக்கு அனுப்பியுள்ளார்.

அமைச்சர் விக்ரமாதித்ய சிங் விலகல்: இதனிடையே மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீதான அதிருப்தி காரணமாக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் ஓர் அங்கமாக நான் நீடிப்பது சரியாக இருக்காது என்பதை மட்டும் நான் உங்கள் அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதனால் நான் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்று தீர்மானித்துள்ளேன். வரும் காலத்தில் எனது மக்களுடன் விவாதம் நடத்தி அடுத்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பேன்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு முறை முதல்வராக இருந்தவருக்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாய் இருந்தவருக்கு (விர்பத்ர சிங்) சிலை வைக்க மால் சாலையில் ஒரு சிறிய இடத்தைக் கண்டடைய இந்த அரசு தவறி விட்டது. கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நான் காங்கிரஸ் உயர் மட்டத்திடமும், பிரியங்கா காந்தி, தேசியத் தலைவரிடம் பேசியுள்ளேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார். விக்ரமாதித்யா சிங், பிரதீபா சிங் மற்றும் முன்னாள் முதல்வர் விர்பத்ர சிங்-ன் மகனாவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x