Published : 28 Feb 2024 07:03 AM
Last Updated : 28 Feb 2024 07:03 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ரூ.500-க்கு மானிய விலை காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.
ரூ.10 லட்சம் வரை.. தேர்தலின்போது, ‘மகாலட்சுமி திட்டம்’ எனும் பெயரில் 6 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி மக்கள் முன் வைத்தது. இதில், ஏற்கனவே, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும்,ஏழைகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் இலவச மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடக்கி வைத்தார்.
6 வாக்குறுதிகளில் இரண்டை மட்டுமே காங்கிரஸார் நிறைவேற்றி உள்ளதாக பிஆர்எஸ் மற்றும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், மேலவை தேர்தல் நடைபெறவிருப்பதால், எவ்வித ஆடம்பரமும் இன்றி, நேற்று தலைமை செயலகத்திலேயே முதல்வர் ரேவந்த் ரெட்டி, ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தையும், 200 யூனிட் வரை ஏழை களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: மாநிலத்தில் பொருளாதார பிரச்சினை இருந்தாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனும் நோக்கில் தற்போது 2 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். விறகு அடுப்பில்சமைத்து கொண்டிருந்த நமது சகோதரிகளுக்கு ரூ.1500-க்கே அடுப்புடன் கூடிய காஸ் இணைப்பை காங்கிரஸ் வழங்கியது.
ரூ.400 என்று இருந்த காஸ் சிலிண்டர் விலையை பாஜக அரசுதற்போது ரூ. 1200 வரை உயர்த்தி விட்டது. இதனால்தான் காஸ் சிலிண்டர் வாங்கும் சுமையை இந்த காங்கிரஸ் அரசு ஏற்கும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி தற்போது ரூ.500-க்கே காஸ் சிலிண்டர் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த மானிய விலை காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.
இதன் மூலம் தெலங்கானாவில் சுமார் 90 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவர். காங்கிரஸ் மூத்ததலைவர் சோனியா காந்தி வாக்குறுதி கொடுத்தால் அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. இவ்வாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT