Published : 28 Feb 2024 07:53 AM
Last Updated : 28 Feb 2024 07:53 AM
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு வருமாறு மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 8-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
டெல்லி அரசின் மதுபானக்கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத்துறை கைதுசெய்துள்ளது. இருவரும் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாக மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.
மேலும், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை மூலம் பாஜக அழிக்க பார்க்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்துகுற்றம்சாட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டில் பெயரளவில் சோதனை நடத்தி, விசாரணைஎன்ற பெயரில் அவரை கைது செய்வதுதான் அமலாக்கத்துறையின் குறிக்கோள். இதன் மூலம் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பாஜகமுடக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்கு வருமாறு 6 முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவதுமுறையாக சம்மன் அனுப்பியது.அப்போதும் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, எப்படிஎனக்கு சம்மன் அனுப்ப முடியும் என அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அவருக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனில் வரும் மார்ச் 4-ம் தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், மார்ச் 16-ம்தேதி நேரில் ஆஜராகும்படி கேஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT