Published : 28 Feb 2024 08:30 AM
Last Updated : 28 Feb 2024 08:30 AM
புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட மொத்தம் 41 பேர்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களுக்குட்பட்ட 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால், நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் 10 இடங்களுக்கு பாஜக சார்பில் 8 பேர், சமாஜ்வாதி சார்பில் 3 பேர் என 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அங்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி எம்எல்ஏ-க்கள் 7 பேர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பதவி விலகிய கொறடா: வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் சட்டப்பேரவை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியிலிருந்து விலகினார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி, பாஜக 7 உறுப்பினர்களையும், சமாஜ்வாதி கட்சி 3 உறுப்பினர்களையும் மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும் எனும் நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களில் சிலர் கட்சி மாறி வாக்களித்ததால், அதுகுறித்து அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குவாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் ஓர் இடத்துக்கு 2 பேர் போட்டியிட்டதால் அங்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வியும் பாஜக சார்பில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷ் மஹாஜனும் போட்டியிட்டனர். இதில் 6 காங்கிரஸ் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். அபிஷேக் மனு சிங்வி தோல்வி கண்டார்.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 4 இடத்துக்கு 5 பேர் போட்டியிட்டதால் அங்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் மாக்கன், சையது நசீர் ஹுஸைன், ஜி.சி. சந்திரசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாஜக சார்பில் போட்டியிட்ட நாராயண்சா பண்டாகே வெற்றி பெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) சார்பில் போட்டியிட்ட குபேந்திர ரெட்டி தோல்வி அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT