Published : 27 Feb 2024 07:33 PM
Last Updated : 27 Feb 2024 07:33 PM

டெல்லியில் 3 எம்எல்ஏக்களை களமிறக்கும் ஆம் ஆத்மி - ஹரியாணா மக்களவை வேட்பாளரும் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முடிவடைந்த சில நாட்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழுவே ஆம் ஆத்மி கட்சியின் முடிவுகள் எடுக்கும் உச்சப்பட்ச அமைப்பாகும். அதன் இன்றையக் கூட்டத்துக்கு பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் டெல்லியின் தற்போதைய மூன்று எம்எல்ஏகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் புதுடெல்லி, தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதில், புதுடெல்லி மக்களவைத் தொகுதிக்கு சோம்நாத் பாரதியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மால்வியா நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதிக்கு மகாபால் மிஷ்ரா பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லி மக்களவைக்கு கோண்ட்லி தொகுதியின் எம்எல்ஏ குல்தீப் குமாரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. துக்ளகாபாத் எம்எல்ஏ சாஹிராம் டெல்லி தெற்கு மக்களைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேபோல், ஹரியாணா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் மக்களவைத் தொகுதியான குருஷேத்திராவுக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு சுஷில் குப்தா போட்டியிடுகிறார்.

கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் டெல்லியின் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பதால், இந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது ஆம் ஆத்மி கட்சிக்கு சவாலானதே. சமீபத்தில் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின் படி ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

டெல்லி, ஹரியாணா போலவே குஜராத், சண்டிகர், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டிருந்ததது. என்றாலும், பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாய் ஆம் ஆத்மி முன்பு அறிவித்திருந்தது. அங்கு இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x