Published : 27 Feb 2024 04:39 PM
Last Updated : 27 Feb 2024 04:39 PM

‘பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்கள்’ - அரசு கண்களை மூடியிருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் தொடர்பான வழக்கு இன்று (பிப்.27) விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இவ்வாறாகக் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், “பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன விளம்பரங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் மீது தவறான தகவல்களைப் பரப்பும் அனைத்துவித மின்னணு, அச்சு ஊடக விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி: ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ (IMA) தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக ஐஎம்ஏ குற்றஞ்சாட்டியது. நவீன மருத்துவமான அலோபதிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியது.

யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத வழக்கினை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், “யோகா குரு பாபா ராம்தேவுக்கு என்னவாயிற்று? அவர் யோகா கலையை பிரபலப்படுத்தியதால் அவர் மீது மரியாதை கொண்டோம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிப்பது தவறு. அவருடைய நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என்று அப்போது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசாங்கத்தைக் கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் மருந்துகள் மீது தவறான தகவல்களைப் பரப்பும் அனைத்துவித மின்னணு, அச்சு ஊடக விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x