Published : 27 Feb 2024 11:16 AM
Last Updated : 27 Feb 2024 11:16 AM
வரும் மக்களவை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வங்கிகள், தபால் நிலையங்களில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் தபால் துறை (டிஓபி) ஆகிய இரண்டு முக்கிய அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.
தேர்தல் தொடர்பான கல்வியறிவை பெற ஏதுவாக பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் அவற்றை முறையாக ஒருங்கிணைக்க கல்வி அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் சமீபத்தில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் இதுகுறித்து கூறியுள்ளதாவது: பதிவு செய்து கொண்ட வாக்காளர்கள் முந்தைய தேர்தல்களில் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை. இது, நகர்ப்புற இளைஞர்களின் அக்கறை இன்மையை காட்டுகிறது. இது, தேர்தல் ஆணையத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
91 கோடி வாக்காளர்களில் 30 கோடி பேர் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்கு சதவீதம் 67.4 சதவீதமாக இருக்கும் நிலையில் அதனை மேம்படுத்தும் சவாலான பணியை தேர்தல் ஆணையம் இப்போது கையில் எடுத்துள்ளது.
இதற்காக, வரும் மக்களைவைத் தேர்தலில் வாக்காளரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
இந்த பரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐபிஏ, டிஓபி அதன் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தேர்தல் குறித்த விழிப்புணர்வு கல்வியை வாக்காளர்களுக்கு வழங்கும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் இப்போது நாடு முழுவதும் 247 உறுப்பினர்களுடன் வலுவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. பொதுத் துறை வங்கிகள் 90,000 மேற்பட்ட கிளைகளையும், 1.36 லட்சம் ஏடிஎம்களையும், தனியார் துறை வங்கிகள் 42,000-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 79,000 ஏடிஎம்களையும் கொண்டுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment