Published : 26 Feb 2024 07:13 AM
Last Updated : 26 Feb 2024 07:13 AM

தேர்தல் நடைமுறையின் சிற்பி - சுகுமார் சென்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-52-ல் நடை பெற்றது. இந்தத் தேர்தலுக்கு சுகுமார் சென் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார். போதிய கட்டமைப்புகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், அவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

அதன்பிறகு இந்திய தேர்தல் நடைபெறுவதை நேரில் காண பல வெளிநாட்டினர் வருகின்றனர். இந்நிலையில், சூடான் அரசு தங்கள் நாட்டில் தேர்தலை நடத்த சுகுமார் சென்னை அழைத்தது. சூடானின் அழைப்பை ஏற்று சுகுமார் சென் அந்நாட்டுக்குச் சென்றார். அங்கு 14 மாதங்கள் செலவிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் குறிப்பில், “இந்தியா அதன் முதல் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதையடுத்து மத்திய கிழக்கு, ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகள் தங்கள் நாட்டில் செயல்படுத்துவதற்காக தேர்தல் நடைமுறை குறித்து இந்தியாவிடம் விரிவான தகவல் கேட்டது.சூடானில் தேர்தலை நடத்துவதற்கு, சர்வதேச ஆணையத் தலைவராக அப்போதைய இந்தியதலைமை தேர்தல் ஆணையர்சுகுமார் சென் பரிந்துரைக்கப்பட்டார். அவர் சூடானில் 14 மாதங்கள் தங்கி, அந்நாட்டுக்கு ஏற்ற தேர்தல் நடைமுறை விதிகளை உருவாக்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தன்னுடைய, ‘ஆவணப்படுத்தப்படாத ஒரு அதிசயம்: மாபெரும் இந்தியத் தேர்தல்’ நூலில் இந்திய தேர்தல் நடைமுறையில் சுகுமார் சென்னின் பங்களிப்புப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “இந்தியாவின் தேர்தல் நடைமுறையை கட்டமைத்தவர் சுகுமார் சென். அன்றைய கால கட் டத்தில் எந்த வசதிகளும் கிடையாது. அப்படியான சூழலிலும் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலை அவர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இன்று இந்திய தேர்தல் என்பது, அதன்வெளிப்படை மற்றும் ஜனநாயகத்தன்மைக்காக உலக அளவில் கவனிக்கப்படக்கூடியதாக உள்ளது. இதற்கு சுகுமார் சென்னின் பங்கு மிக முக்கியமானது” என்று பாராட்டி எழுதியுள்ளார்.

சுகுமார் சென், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைசெயலராக பணியாற்றிவந்தார். இந்திய அரசு அவருக்கு கடந்த1954-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதுவழங்கி கவுரவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x