Published : 19 Feb 2018 07:16 AM
Last Updated : 19 Feb 2018 07:16 AM

ஆந்திரா ஏரியில் மிதந்த 7 சடலங்கள் மீட்பு: தமிழகத்தின் செம்மர கடத்தல் கும்பல் அடித்து கொலை?- கடப்பா போலீஸார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த தமிழர் கள் 7 பேரின் சடலங்களை நேற்று போலீஸார் மீட்டனர். இது தற் செயலாக நடந்த விபத்தா, அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசினார்களா எனும் கோணங்களில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் கடத்தும் கும்பல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமும் திருப்பதி, கடப்பா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் செம்மர கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது.

இதனைத் தடுக்க ஆந்திர அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட எல்லைகளிலும் தமிழக - ஆந்திரா-கர்நாடக மாநில எல்லைகளிலும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வனத்துறையினர், காவல் துறையினர் இருவரும் கூட்டாக சேர்ந்து வனப்பகுதிகளில் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரடிப் படை

மேலும், செம்மர கடத்தலை முழுமையாக தடுக்க அதிரடிப்படையையும் ஆந்திர அரசு உருவாக்கி உள்ளது. இந்த அதிரடிப்படை திருப்பதியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்லும் கும்பல் அதிரடிப்படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்படுவோர், போலீஸார் பல முறை கவுன்சிலிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் மறுபடியும் பணத்ததுக்கு ஆசைப்பட்டு கடத்தலில் ஈடுபட்டு தங்களது உயிர்களை இழக்கின்றனர்.

போலீஸார் அறிவுறுத்தல்

இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கூட அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு செம்மரங்களை வெட்ட ஆந்திராவுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று கடப்பா மாவட்டம், திருப்பதி-கடப்பா நெடுஞ்சாலையில் உள்ள ஒண்டி மிட்டா எனும் பகுதியில் இருக்கும் ஒரு ஏரியில் 7 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அதில் 5 சடலங்களை போலீஸார் மீட்டனர். இவர்கள் அனைவரும் செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் 2 சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவர்களைத் தவிர, மேலும் சில சடலங்களும் ஏரியில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சடலங்களுடன் அவர்கள் கொண்டு சென்ற பைகளும் ஏரியில் மிதந்தன. இவை கள் மூலம் இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த செம்மர கடத்தல் கும்பலில் இருப்பவர்கள் என போலீஸார் உறுதிப்படுத்தினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்த நெடுஞ்சாலையில், கடப்பா போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது போலீஸார் நிறுத்தியும் நிற்காமல் ஒரு லாரி வேகமாகச் சென்று விட்டது. இதில் சுமார் 30 செம்மர கடத்தல்காரர்கள் இருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அடித்துக் கொலையா?

இவர்கள்தான், போலீஸ் பயத்தில் ஏரியில் குதித்து வனப்பகுதிக்குள் தப்பிக்கச் செல்ல முயன்றபோது ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீ ஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இறந்தவர்களின் சடலங்கள் மீது சில காயங்கள் காணப்படுவதால், இவர்களை யாரேனும் அடித்து கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என அப்பகுதி கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து கடப்பா போலீஸார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x