Last Updated : 19 Feb, 2018 05:12 PM

 

Published : 19 Feb 2018 05:12 PM
Last Updated : 19 Feb 2018 05:12 PM

சூறையாடப்பட்ட சுதந்திரப் போராட்ட சொத்து - இது பஞ்சாப் நேஷனல் வங்கியின் கதை

சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் வருகைக்கு முன்பே, பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.

அப்போது நடந்த சுதேசி இயக்கத்தின்போது, உள்நாட்டுத் தொழிலை வளர்ப்பதற்காக முயற்சிகள் நடந்தன. பஞ்சாப் சிங்கம் என புகழப்பட்ட லாலா லஜபதி ராய் இந்த வங்கியின் தொடக்ககால நிர்வாகியாக செயல்பட்டார். அப்போதைய ஒன்றுபட்ட இந்தியாவில், வலிமையான சுதேசி வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டது.

பாகிஸ்தானில் தொடக்கம்

1895-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் கிளை தற்போதைய பாகிஸ்தானின் லாகூர் நகரில் தொடங்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வங்கியின் கிளை பஞ்சாப் மட்டுமின்றி சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும் வேகமாக வளர்ந்தது. பின்னர் நாட்டின் பல இடங்களிலும் கிளை பரப்பி மாபெரும் சுதேசி வங்கியாக உருவெடுத்தது.

பர்மாவிலும் இந்த வங்கி வேர் விட்டுப் பரவியது. பஞ்சாப் மக்களின் பெருமைமிகு வங்கி, நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியாக வளர்ந்தது. முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வங்கியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர். லாலா லஜபதி ராய் காலத்திற்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, மகாத்மா காந்தி என பலரும் வங்கிக்கு வழிகாட்டினர்.

இரண்டாம் உலகப்போர்

லாலா யோத் ராஜ் வங்கியை நிர்வாகியாக இருந்து கவனித்து வந்தார். வங்கியின் நிர்வாகிகள் பலரையும் பொய் வழக்கு போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் தள்ளியது. வங்கி நிர்வாகிகள் சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதால் கடும் நெருக்கடியை சந்தித்தது இந்த வங்கி. இருப்பினும் புதிய புதிய நபர்கள் வங்கியை முன்னெடுத்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது நாடுமுழுவதுமே பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டதால், வங்கித்துறையும் சரிவைச் சந்தித்தது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. எனினும் பஞ்சாப் மக்களின் கடுமையான உழைப்பும், பொருளும் அந்த வங்கியை மீண்டும் தலை நிமிர்த்தியது.

சுதந்திரத்திற்குப் பின்

இதன் பின், நாடு சுதந்திரமடைந்தபோது, உண்மையிலேயே பெரும் சவாலை இந்த வங்கி சந்தித்து. ஒன்றுபட்ட இந்தியா பிரிந்து தற்போதைய இந்தியாவும், பாகிஸ்தானும் உருவாயின. அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது.

நாடு இரண்டாக பிரிக்கப்பட்டதை போன்ற, இந்த வங்கி பிரிக்கப்படும் சூழல் உருவானது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பெரும்பாலன வாடிக்கையாளர்கள் இந்தியப் பகுதியில் இருந்தனர். ஆனால் வங்கியின் தலைமை அலுவலகம் உட்பட சொத்துகள் பல பாகிஸ்தானில் இருந்தன.

பாகிஸ்தானில் சொத்துகள் வைத்திருந்த இந்துக்களும், சீக்கியர்களும் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வரும் சூழல் ஏற்பட்டது. அதுபோலவே இந்தியப் பகுதியில் இருந்து ஏராளமான முஸ்லிம் மக்கள் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றனர்.

பாகிஸ்தான் பகுதியில் சொத்துகளை விட்டு விட்டு இந்தியாவிற்கு வெறும் கையுடன் வந்து சேர வேண்டிய அவல நிலையிலும் பஞ்சாப் மக்கள் மன உறுதியை கைவிட்டு விடவில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையகம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

நாட்டுடமையான வங்கி

அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் 33 சதவீத கிளைகளை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மொத்தம் 97 வங்கி கிளைகளும், அதன் சொத்துகளும் கைவிட்டுப் போயின. 40 சதவீத டெபாசிட் தொகையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும் பஞ்சாப் மக்களின் ஒன்றுபட்ட முயற்சியுடன் லாலா யோத் ராஜ் அந்த வங்கியை மீட்டெடுத்தார்.

லாலா யோத் ராஜ் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், பஞ்சாப் நேஷனல் வங்கி, தற்போது பாகிஸ்தானில் மிகப் பெரிய வங்கியாக மாறி இருக்கும். அந்தக் காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிகரான பெரிய வங்கி ஏதும் அப்போது பாகிஸ்தானில் இல்லை. அதன் பிறகும் சில சில சலசலப்புகளை பஞ்சாப் நேஷனல் வங்கி சந்தித்தது.

எனினும், 1969-ம் ஆண்டு உண்மையிலயே பெரிய நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கியது பஞ்சாப் நேஷனல் வங்கி. ஆம். 1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படுவதாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். பல கோடி ரூபாய் நிதி கொண்ட வங்கியாக பஞ்சாப் மக்கள் வளர்த்தெடுத்த வங்கி அவர்கள் கையை விட்டுப் பறிபோனது. ஆனாலும் தேசத்தின் சொத்து என்பதால் மனநிறைவு பெற்றனர்.

அதன் பிறகு வங்கி மிக வேகமாக வளர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய வர்த்தக வங்கியாக உருவெடுத்தது. சாதாரண விவசாயிகள், நடுத்தர வகுப்பினருக்கு அதிகம் சேவை செய்து வந்த இந்த வங்கியில் சில ஆண்டுகளாகவே ஊழல் கரை புரண்டு ஓடுகிறது.

சூறையாடப்பட்ட சொத்து

ஆனால் இப்போது, வங்கியின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இதை எண்ணி வங்கியை உருவாக்கிய பஞ்சாப் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர். 1895-ம் ஆண்டு முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி மக்களின் வங்கியாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் நாட்டுடமையாக்கப்பட்டு அரசின் சொத்தாக மாறிய இந்த வங்கி ஊழல் அரசியல்வாதிகளாலும், மோசடி தொழிலதிபர்களாலும் சூறையாடப்பட்டு வருவதாக பஞ்சாப் மக்களும், வங்கியின் நீண்டநாள் வாடிக்கையாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x